சிவகாசிக்கு தினமும் 140 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 140 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.
சிவகாசி,
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 140 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.
தாமிரபரணி திட்டம்
தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.543 கோடியே 20 லட்சம் செலவில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளைம் நகராட்சி, சிவகாசி மாநகராட்சி ஆகிய பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்தநிலையில் சங்கரன் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதன் தொடக்க விழா நடைபெற்றது.
திடீர் ஆய்வு
இந்தநிலையில் தாமிரபரணியில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள காமராஜர் நீர் தேக்க வளாகத்தில் உள்ள ராட்சத நீர்தேக்க தொட்டியில் சேமித்து வைத்து பின்னர் அங்கிருந்து சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் உள்ள 16 குடிநீர் தேக்க தொட்டிகளுக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. இதற்கிடையில் இந்த பணிகளை மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், கவுன்சிலர் ராஜேஷ், அதிகாரிகள் சாகுல்அமீது, சித்திக், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
140 லட்சம் லிட்டர்
இதுகுறித்து மேயர் சங்கீதாஇன்பம் கூறியதாவது:-
தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு தினமும் 140 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். அதனை கொண்டு தினமும் ஒரு மனிதனுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 135 லிட்டர் தண்ணீர் கொடுக்க முடியும். அவ்வாறு கொடுத்தால் நமக்கு 120 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும். மீதமுள்ள 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அவசர தேவைக்கு பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.