ஈரோடு வாலிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த சிவகாசி இளம்பெண்
பேஸ்புக் மூலம் பழகிய ஈரோடு வாலிபரிடம் பழைய நகைகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.12 லட்சத்தை மோசடி செய்த சிவகாசி இளம்பெணை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகாசி,
பேஸ்புக் மூலம் பழகிய ஈரோடு வாலிபரிடம் பழைய நகைகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.12 லட்சத்தை மோசடி செய்த சிவகாசி இளம்பெணை போலீசார் தேடி வருகிறார்கள்.
காண்டிராக்டர்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவை சேர்ந்த சின்னசாமி மகன் ரமேஷ் (வயது 41). இவர் அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் காண்டிராக்டராக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் பேஸ்புக் நண்பர்களிடம் நலம் விசாரிப்பது உண்டு. புதிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்த செல்வம் மனைவி பேச்சியம்மாள் (31) என்பவர் பேஸ்புக் மூலம் ரமேசிடம் அறிமுகம் ஆகி உள்ளார். பின்னர் கடந்த 1 வாரமாக தோழியாக பழகி வந்துள்ளார். அப்போது பேச்சியம்மாள் தான் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருப்பதாகவும், 380 கிராம் தங்க நகைகள் வங்கி மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், குறைந்த விலையில் இந்த தங்கநகைகளை வாங்கி கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர் சில நகைகளின் புகைபடங்களை ரமேசுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி அதன் எடை விவரங்களையும், கொடுக்க வேண்டிய தொகைகள் குறித்தும் தகவல் அனுப்பி உள்ளார்.
பண மோசடி
இந்தநிலையில் ரமேஷ் அந்த பழைய நகைகளை வாங்க முடிவு செய்து ஈரோட்டில் இருந்து தனது நண்பர்கள் 2 பேருடன் காரில் நேற்று முன்தினம் சிவகாசி வந்துள்ளார். பின்னர் பஸ் நிலையம் அருகில் காத்திருக்கும்படி பேச்சியம்மாள் கூறியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த பேச்சியம்மாள் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்று இந்த வங்கியில் தான் பழைய நகைகள் இருக்கிறது.
பணத்தை கொடுங்கள் நகைகளை திருப்பி வருகிறேன் என கூறி உள்ளார். அப்போது ரமேஷ் தனது வங்கி கணக்கில் தான் பணம் இருக்கிறது. எனவே அதனை உங்கள் கணக்குக்கு மாற்றி விடுகிறேன். அதன் பின்னர் நீங்கள் நகைளை வாங்கி தாருங்கள் என்று கூறி ரூ.11 லட்சத்தை பேச்சியம்மாள் கொடுத்த வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளார். பணம் பேச்சியம்மாள் கணக்கிற்கு சென்றதற்கான தகவல்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி சரி பார்க்க கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து ரமேசின் நண்பர்கள் 2 பேரையும் வங்கியின் முன்பு காருடன் நிற்க சொல்லிவிட்டு பேச்சியம்மாள் தனது மோட்டார் சைக்கிளில் ரமேசை மட்டும் அழைத்துக் கொண்டு சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்றுள்ளார்.
தப்பி ஓட்டம்
பின்னர் பாக்கி பணம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை கேட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை எடுத்து அதனுடன் தான் கொண்டு வந்த ரூ.58 ஆயிரத்தையும் சேர்த்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
3 வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு தனக்கு வரும் என்று ரமேஷ் எண்ணிய நிலையில் பஸ் நிலையம் அருகில் உள்ள வங்கியின் முன்பு பேச்சியம்மாள், ரமேஷ் ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பேச்சியம்மமாள் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து ரமேஷ், தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பேச்சியம்மாள் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பேச்சியம்மாள் தூத்துக்குடி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தூத்துக்குடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.