சிவகாசி காலாங்கரை கண்மாயில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படும் நிலை
சிவகாசி காலாங்கரை கண்மாயில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படும் நிலை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிவகாசி,
சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் காலாங்கரை கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு அருகில் உள்ள சித்துராஜபுரம், பூலாவூரணி ஆகிய பஞ்சாயத்து பகுதியில் பெய்யும் மழைநீர் வருவது உண்டு. இந்த கண்மாய் நிரம்பி நிலத்தின் கீழ் உள்ள கல் பாதை வழியாக அந்த பகுதியில் உள்ள செண்பககுட்டி தெப்பத்தை அடையும்.
100 ஆண்டுகள் பழமையான இந்த கண்மாயின் அருகில் தற்போது அதிக அளவில் வீடுகள் மற்றும் கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கனரக வாகனங்களில் கொண்டு வரப்படும் கட்டிட கழிவுகளை இங்கு சிலர் கொட்டி வருகிறார்கள். இதனால் கண்மாயின் அளவு சுருங்கி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று மதியம் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன், வருவாய் ஆய்வாளர் விக்னேஷ்வரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காலாங்கரை கண்மாய் பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது அதிக அளவில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியை ஆய்வு செய்து கண்மாய் அளவு குறித்து அறிக்கை தர வருவாய்த்துறையினருக்கு ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் உத்தரவிட்டார். கண்மாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை தடுக்க ஆர்.டி.ஓ. எடுத்த முயற்சியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர். இனி வரும் காலத்தில் அந்த பகுதியில் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறாமல் இருக்க கண்மாயை சுற்றி தடுப்புவேலி அமைக்க தேவையான நடவடிகையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று கோரிக் கை வைத்தனர்.