வாராப்பூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 62 பேர் காயம்


வாராப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 62 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

ஆலங்குடி அருகே வாராப்பூரில் பிரசித்திபெற்ற பெரிய அய்யனார், பாண்டி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கருப்பர் கோவில் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. அபிநயா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முன்னதாக வாடிவாசலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.

வீரர்களை பந்தாடிய காளைகள்

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஜல்லிக்கட்டில் ஆலங்குடி, அன்னவாசல், இலுப்பூர், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 853 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

62 பேர் காயம்

இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உள்பட 62 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 6 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார். இதில், மின்விசிறி, கட்டில், குக்கர், பாத்திரங்கள், பிரிட்ஜ், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் சம்பட்டிவிடுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை வாராப்பூர் கிராம மக்கள் மற்றும் விழாக்குழு கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story