விண்ணை தொடும் பூக்கள் விலைஇல்லத்தரசி, வியாபாரிகள் கருத்து
விண்ணை தொடும் பூக்கள் விலை இல்லத்தரசி, வியாபாரிகள் கருத்து
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி, தேவூர், மேச்சேரி, டேனிஷ்பேட்டை, பூசாரிப்பட்டி, கம்மாளபட்டி, வாழகவுண்டம்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவை சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் அருகே உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
10 டன் பூக்கள்
அதே போன்று தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, கடத்தூர், பையர்ந்ந்தம், நல்லம்பள்ளி, தொப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் விற்பனைக்கு கெண்டு வரப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து தக்காளி ரோஜா, மஞ்சள் ரோஜா, ஆரஞ்சு ரோஜா ஆகியவை டன் கணக்கில் விற்பனைக்கு வருகிறது.
அதன்படி சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 10 டன் பூக்கள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் மார்க்கெட்டில் தினமும் காலை முதல் இரவு வரை பூ வியாபாரிகள், பூ விவசாயிகள் மற்றும் பூக்கள் வாங்கும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியபடி காணப்படும்.
விலை உயர்வு
விழாக் காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவ மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு குண்டு மல்லி பூக்கள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ஒரு கிலோ குண்டு மல்லிப்பூ ரூ.1,200-க்கு விற்பனையாகிறது. ஆனால் சாமந்தி பூக்கள் வரத்து அதிகமாக உள்ளதால், ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குண்டு மல்லி பூவின் விலை பொங்கல் பண்டிகை வரை உயர்வாக இருக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள், பூ வியாபாரிகள், பூ விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மனம் குளிர...
சேலம் காந்தி ரோட்டை சேர்ந்த இல்லத்தரசி ராஜேஸ்வரி:-
தமிழ் பெண்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை பூ என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போனது. அதாவது முன்பெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றாலே பூக்கள் வைத்துதான் செல்வார்கள். உறவினர் வீட்டிற்கு சென்றால் அங்கு உள்ளவர்கள் முழம் கணக்கில் பூக்களை தலையில் வைத்து விடுவார்கள். ஆனால் தற்போது குண்டு மல்லி பூ விலை விண்ணைத்தொடும் அளவில் உள்ளது. இதனால் முழம் கணக்கில் தலையில் வைக்கப்பட்ட குண்டு மல்லிக்கு பதில் ஒரு ரோஜா பூ மட்டும் வாங்கி தலையில் வைத்துக்கொள்ளும் நிலை உள்ளது. பூக்கள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர். கோவில்கள் மற்றும் வீடுகளில் சாமி கும்பிடும் போது குறைந்த விலையில் உள்ள பூக்களை பயன்படுத்தி பூஜை செய்து கொள்கிறோம். எனவே பெண்கள் அதிகம் விரும்பி சூடும், மல்லிகை பூக்களின் விலையை குறைத்து பெண்களின் மனம் குளிர செய்ய வேண்டும்.
அரசு விலை நிர்ணயம்
ஓமலூரை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை சங்கீதா:-
பூக்கள் விலை திடீரென ஏறுகிறது. திடீரென குறைகிறது. புரட்டாசி, மார்கழி, தை மாதங்களில் பெண்கள் அதிகம் பூஜை செய்வார்கள். ஆனால் தற்போது விலை ஏற்றத்தை பார்க்கும் போது பூக்களை வாங்கலாமா, வேண்டாமா என்று எண்ண தோன்றுகிறது. பூக்கள் விலை ஏறுகிறதே தவிர விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. முகூர்த்த காலங்களில் ஒரு முழம் மல்லிகை பூ ரூ.250 வரை விற்பனையாகிறது. இதனால் பூ வைக்காமலே விழாக்கள், கோவில்களுக்கு செல்லலாம் என்ற மன நிலை ஏற்படுகிறது. இல்லாவிட்டால் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு பூவை வாங்கி தலையில் வைத்துக்கொண்டு செல்லலாம் என்று தோன்றுகிறது. எனவே பூக்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இழப்பீடு
சேலம் வி.மேட்டூரை சேர்ந்த விவசாயி மாதம்மா:-
நான் 1½ ஏக்கர் பரப்பளவில் சாமந்தி பூக்களை சாகுபடி செய்து உள்ளேன். நானே பூ மார்க்கெட்டுக்கு பூக்களை கொண்டு வந்து மொத்த விலைக்கு விற்று வருகிறேன். தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளதால் சாமந்தி பூக்கள் விற்பனைக்கு அதிகம் வந்து உள்ளன. இதனால் ஒரு கிலோ சாமந்தி பூ ரூ.30-க்கு தான் விற்கப்படுகிறது. சாமந்தி பூக்கள் சூடுவதை அதிகமான பெண்கள் விரும்பமாட்டார்கள். இதனால் சாமந்தி பூக்கள் அதிகம் விற்பனையாகாது. ஒரு ஏக்கர் பூ சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் வரை செலவு ஆகி உள்ளது. ஆனால் இதுவரை ரூ.30 ஆயிரத்துக்கு மட்டுமே பூ விற்பனை செய்து உள்ளேன். எனவே பூ வியாபாரிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கடும் நஷ்டம்
வட்ராம்பாளையத்தை சேர்ந்த பூ விவசாயி காவேரி:-
நான் ஒரு ஏக்கரில் சாமந்தி, ஒரு ஏக்கரில் செண்டு மல்லி சாகுபடி செய்துள்ளேன். சாமந்தி சாகுபடிக்கு ரூ.1 லட்சம் வரை செலவானது. தற்போது பெய்த மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் சந்தைகளுக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் ரூ.100-க்கு விற்பனையான ஒரு கிலோ சாமந்தி தற்போது ரூ.50 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வரக்கூடிய பொங்கல் பண்டிகையில் பூக்கள் விலை உயர்வடைந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
சிரமம்
சேலம் வ.உ.சி. மார்க்கெட் சங்க நிர்வாகி ராமு:-
பனிப்பொழிவு காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் எப்போதும் குண்டு மல்லி விளைச்சல் குறைவாகவே இருக்கும். இதனால் மார்க்கெட்டுக்கு குண்டு மல்லி மிக, மிக குறைந்த அளவே விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதன் காரணமாக அவற்றின் விலை இயல்பாகவே அதிகரித்து விற்பனையாகும். பண்டிகை, விழா, முகூர்த்த நாட்களில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.2 ஆயிரம் வரை அதிகரிக்கும். இது ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஆனால் சாமந்தி, அரளி உள்ளிட்ட மற்ற பூக்களின் வரத்து அதிகமாக உள்ளதால் அவற்றின் விலை குறைவாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் நஷ்டம், எங்களுக்கும் நஷ்டம்.
தற்போது சாமந்தி, ரோஜா சீசனாக உள்ளது. மீதம் உள்ள ஜாதி (பிச்சிப்பூ), மல்லி, முல்லை, கனகாம்பரம் போன்ற பூக்கள் சீசன் இல்லாததால் குறைந்த அளவில் வருகிறது. இதனால் இவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த வகைப்பூக்கள் பனிக் காலங்களில் உற்பத்தியாவதில்லை. பிப்ரவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை அதிக அளவு வரத்து இருக்கும். அதேநேரம் விலையும் குறைவாகவே இருக்கும். எனவே பெண்கள் தாங்கள் விரும்பும் பூக்களை விரும்பி சூடி கொள்வதற்கு வருகிற பிப்ரவரி மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு குறைந்த விலையில் அதிகளவு விரும்பிய பூக்களை பெண்களால் வாங்கி பயன்படுத்த முடியும். பூக்கள் விலை உயர்வுக்கு பூ வியாபாரிகள் காரணம் இல்லை. காலநிலைதான் காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.