கழுத்தை அறுத்து பெண் படுகொலை


கழுத்தை அறுத்து பெண் படுகொலை
x
தினத்தந்தி 27 Nov 2022 7:00 PM GMT (Updated: 27 Nov 2022 7:01 PM GMT)

எரியோடு அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். குடும்ப தகராறில் வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

குடும்ப தகராறு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). பந்தல் அமைக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி தேவி (35). இந்த தம்பதிக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்சன் (8) என்ற 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த தீபாவளி பண்டிகைக்கு துணி எடுப்பது சம்பந்தமாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு குஜிலியம்பாறை அருகே அரண்மனையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு தேவி தனது குழந்தைகளுடன் சென்று தங்கினார்.

இதனையடுத்து ராஜசேகர் அரண்மனையூருக்கு சென்று பல முறை அழைத்தும் குடும்பம் நடத்த தேவி வரவில்லை.

கழுத்தை அறுத்து படுகொலை

இந்த நிலையில் ராஜசேகர் நேற்று மீண்டும் அரண்மனையூருக்கு சென்றார். தேவியின் தாயார் தங்கம் தோட்ட வேலைக்கு சென்றிருந்தார். 3 குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்தனர். வீட்டில் இருந்த தேவியிடம், தன்னுடன் ஊருக்கு வரும்படி ராஜசேகர் அழைத்தார்.

ஆனால் தேவி வர மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவியின் கழுத்தை ஆட்டை அறுப்பதை போல அறுத்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தேவி, சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ராஜசேகர் தப்பி சென்று விட்டார்.

கணவருக்கு வலைவீச்சு

சிறிது நேரத்தில் தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற தங்கம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் தேவி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜசேகரை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் கழுத்தை அறுத்து மனைவியை கணவர் படுகொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story