இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் 158 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் 158 குழந்தைகளுக்கு நேற்று தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் 158 குழந்தைகளுக்கு நேற்று தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்மயிறக்கத் திருவிழா
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்கத் திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு பூஜை, 8 மணிக்கு எழுந்தருளல், 11.30 மணிக்கு பனங்கோடுதெக்கதில் இருந்து தூக்க நேர்ச்சை செய்பவர்கள் விழா பந்தலுக்கு புறப்பட்டு வருதல் போன்றவை நடந்தது. தொடர்ந்து குத்தியோட்டம், பூமாலை, தாலப்பொலி, மஞ்சள் குடம், துலாபாரம், பிடிப்பணம், உருள் நேர்ச்சை உள்ளிட்ட நேர்ச்சைகள் நிறைவேற்றப்பட்டது.
தூக்க நேர்ச்சை
பின்னர் பகல் 12 மணிக்கு தூக்க நேர்ச்சை தொடங்கியது. அப்போது தூக்க வண்டியில் உள்ள 2 தூக்க வில்களில் 4 தூக்கக்காரர்கள் கட்டப்பட்டனர். பின்னர் தூக்கக்காரர்களில் கைகளில் தலா ஒரு குழந்தை வீதம் 4 குழந்தைகள் கொடுக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் தூக்க வில்லை உயர்த்தி வண்டியை இழுத்தபடி அம்மன் எழுந்தருளியுள்ள பச்சைப் பந்தலை சுற்றி வந்தனர்.
அப்போது, சுற்றி நின்ற திரளான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். நேற்று மதியம் தொடங்கிய தூக்க நேர்ச்சை இரவு வரை நடந்தது. இதில் 158 குழந்தைகளுக்கு நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது.
தூக்க நேர்ச்சை விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்தும், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கமுகு எழுந்தருளல்
விழாவில் வருகிற 30-ந் தேதி கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சியும், விழாவின் நிறைவு நாளான 31- ந் தேதி மாலை 4 மணிக்கு பொங்கல் வழிபாடும் நடைபெறுகிறது.