மந்தமாக நடைபெறும் சாலை பணி
கள்ளக்குறிச்சி அருகே மந்தமாக நடைபெறும் சாலை பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே இந்திலி கிழக்கு தெருவில் இருந்து மயானம் வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து அங்கு புதிதாக தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக சாலையில் ஜல்லிகள் கொட்டி சமப்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு சாலையில் தார் போட்டு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது சாலை பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. சாலையில் கிடக்கும் ஜல்லிகளால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.
நடவடிக்கை
மேலும் இந்த சாலை வழியாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வாகனங்களில் எடுத்த செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் சாலை பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.