மதகு பொருத்தும் பணி மழையால் தொய்வு
பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி மழையால் தொய்வடைந்து உள்ளது. ஒரு வாரத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி மழையால் தொய்வடைந்து உள்ளது. ஒரு வாரத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு
பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் அணை முழுகொள்ளளவை எட்டியது. இதை தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இரும்பு சங்கிலி அறுந்து பீம் (சுவர்) இடிந்து விழுந்ததில் மதகு சேதமடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து புதிதாக மதகு பொருத்துவதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் திருச்சியில் உள்ள பணிமனையில் இருந்து உபகரணங்கள் வரவழைக்கப்பட்டது. இதை தொடர்ந்து உபகரணங்களை வெல்டிங் வைத்து இணைத்து மதகு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
90 சதவீதம் நிறைவு
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பரம்பிக்குளம் அணையில் சேதமடைந்த மதகிற்கு பதிலாக ரூ.7 கோடி செலவில் புதிதாக மதகு பொருத்தப்பட உள்ளது. இதற்காக உபகரணங்களை வெல்டிங் வைத்து இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளன. மழை பெய்து வருவதால் பணிகளில் சிறிது தொய்வு ஏற்படுகிறது. தொடர்ந்து மழை இல்லாமல் இருந்தால் ஒரு வாரத்திற்குள் பணிகளை முடித்து புதிய மதகு பொருத்தப்படும் என்றனர்.
பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கூறுகையில், மதகு சேதமானதால் சுமார் 5 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி உள்ளது. இது பி.ஏ.பி. விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வருங்காலத்தில் இதுபோன்றுநடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.