மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பு-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு
மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன என்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
பேரையூர்,
மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன என்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து டி.கல்லுப்பட்டியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
மின் கட்டணத்தை உயர்த்தி தி.மு.க.அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது அரசு மானியம் வழங்காமல் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு, குறு, நிறுவனங்கள் உள்ளன. 20 லட்சம் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த மின்சார கட்டண உயர்வால் இந்த நிறுவனத்தினர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சொத்து வரி
மின்கட்டண உயர்வால் மக்கள் கொந்தளித்து உள்ளனர். தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர். கல்விக்கடன் ரத்து செய்யவில்லை. இருசக்கர வாகன திட்டத்தை நிறுத்திவிட்டனர். இப்போது 52 சதவீதம் மின்கட்டண உயர்வு, 150 சதவீதம் சொத்து வரி உயர்ந்துள்ளது. இன்றைக்கு காவல்துறை ஏவல் துறையாக மாறி உள்ளது. குற்றம் செய்பவர்களை விட்டுவிட்டு அ.தி.மு.க.வினரை பிடிப்பதிலேயே போலீஸ் குறியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, பேரூர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.