சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் சென்னையில் உண்ணாவிரதம்


சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் சென்னையில் உண்ணாவிரதம்
x

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சென்னை,

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் அக்டோபர் 16-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில், நிலைக்கட்டணத்தொகை 430 சதவீதம் உயர்வை திரும்ப பெற வேண்டும், 'பீக்ஹவர்' கட்டண உயர்வு ரத்து, சூரிய ஒளி மின் உற்பத்திக்கு வசூலிக்கப்படும் தொகை ரத்து, ஆண்டுக்கு ஒருமுறை 6 சதவீதம் மின்கட்டண உயர்வு ரத்து, வெல்டிங் இணைப்பு பெற்ற தொழில்முனைவோர்களுக்கு விதிக்கப்படும் 15 சதவீத கூடுதல் தொகை திரும்ப பெறுதல் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

முதுகெலும்பு

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.ஜேம்ஸ், எம்.ஜெயபால் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உற்பத்தித்துறை சார்ந்த தொழில் முனைவோர்களால், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே, தமிழ்நாடு அரசின் முதுகெலும்பாக விளங்குகிறது. அரசின் சுமையை குறைக்கும் இந்த தொழில் நிறுவனங்களை பாதிக்கும் அளவுக்கு, மின்சார வாரியம் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

இதன் காரணமாக, பொருளாதார ரீதியில் தமிழ்நாடு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும். சூரியன் உலகிற்கே சொந்தமானது. அது, தனி நபருக்கோ, தனி நாட்டுக்கோ சொந்தமானது கிடையாது. ஆனால், சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்துவதற்காக எங்களிடம் கட்டணம் கேட்கின்றனர். இது எந்த வகையில் நியாயம்.

3-ம் கட்ட போராட்டம்

எங்கள் உண்ணாவிரத போராட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் என நினைத்திருந்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இதன் காரணமாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளோம். அடுத்ததாக, 3-ம் கட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

முதலாவதாக, நவம்பர் 6-ந் தேதி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.க்களையும் நேரில் சந்தித்து, எங்கள் கோரிக்கை தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்த உள்ளோம்.

தொடர்ந்து, டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரில் தொழிலாளர்களுடன் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதன்பிறகு எங்கள் கோரிக்கை மீது அரசு செவி சாய்க்கவில்லை என்றால், டிசம்பர் 18-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் செய்யும். இதனால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story