சிசு உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
9 மாத கர்ப்பிணியை தாக்கியதில் குழந்தை இறந்த விவகாரம்: சிசு உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
வீரபாண்டி
திருப்பூர் அருகே 9 மாத கர்ப்பிணியை தாக்கியதில் குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக தந்தையை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிசு உடலை ைவ தோண்டி எடுத்து மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தம்பதி
திருப்பூர் வீரபாண்டி கிருஷ்ணா நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜோதிகா (24). இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். இந்த நிலையில் ஜோதிகா 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் ஜோதிகா மீது தர்மராஜிக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தர்மராஜ் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து ஜோதிகா வயிற்றில் பலமாக தாக்கியுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் ஜோதிகா அலறியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆபரேசன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். இதற்கிடையில் குழந்தை இறந்தது என்று தெரியவந்ததும் அங்கிருந்து தர்மராஜ் தப்பியோடி தலைமறைவானார். அதன் பின்னர் இறந்து போன 9 மாத சிசுவை ஜோதிகாவின் உறவினர்கள் வீரபாண்டி பகுதியில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
தன்னை தாக்கியது தொடர்பாக தர்மராஜ் மீது வீரபாண்டி போலீசில் ஜோதிகா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் வீரபாண்டி பகுதியில் புதைக்கப்பட்ட சிசுவை திருப்பூர் தெற்கு தாசில்தார் புனிதவதி தலைமையில் மருத்துவ குழுவினர் நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட தர்மராஜிடம் போலீசார் விசாரணை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழுவினர் வந்த போது எடுத்த படம்.