கடன் கொடுப்பதை தவிர்க்கும் வர்த்தகர்கள்


கடன் கொடுப்பதை தவிர்க்கும் வர்த்தகர்கள்
x

கடன் கொடுப்பதை தவிர்க்கும் வர்த்தகர்கள்

திருப்பூர்

திருப்பூர்

பனியன் தொழில் நகரான திருப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் வேலைவாய்ப்பு விளம்பர பலகை வரவேற்ற காலம் மாறிப்போய், இருக்கின்ற பனியன் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு, உலக பொருளாதார மந்தநிலை காரணமாக மந்தநிலைக்கு சென்ற பனியன் தொழில் மெல்ல, மெல்ல எழுந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லை. வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே பல நிறுவனங்களில் வேலை என்ற நிலை தொடர்கிறது.

இதன்காரணமாக தொழில்கள் நன்றாக நடந்த நேரத்தில் தவணைக்கு வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி குவித்த தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமல் வாங்கிய பொருட்களுக்கு தவணைத்தொகையை கூட திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். மாநகரின் தினசரி வாழ்க்கை செலவை தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டவர்களும் உள்ளனர்.

கடன் கொடுப்பதை தவிர்க்கிறார்கள்

திருப்பூரில் தொழிலாளர்களின் நிலை இப்படி என்றால் தொழில்துறையினரின் நிலையும் மோசமாகவே இருக்கிறது. தொழில் நடக்கும்போது பணப்புழக்கம் இருக்கும். சனிக்கிழமை பனியன் நிறுவனங்களில் சம்பளம் போடுவார்கள். அதை பெற்று கடன் தொகையை ஈடுசெய்வார்கள். தற்போது தொழில் முடக்கம் காரணமாக தொழிலாளர்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது. இதன்காரணமாக கடைகளில் கடன் கொடுப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.

இந்தநிலையில் திருப்பூரில் உள்ள மளிகைக்கடைக்காரர் ஒருவர் தனது கடைக்கு முன்பு வித்தியாசமான விளம்பர பேனரை வைத்துள்ளார். அதில் இடம்பெற்ற வாசகம் மாநகரின் தொழில் நிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த விளம்பர பேனரில் இருந்த வாசகம் வருமாறு:-

மளிகை கடையில் பேனர்

திருப்பூரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் எனக்கு கடன் கொடுக்கும் ஏஜென்சிகள் பணம் கொடுத்தால்தான் சரக்கை கொடுப்பதாக தெரிவித்து விட்டார்கள். ஆகவே வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் நிதியில்லை. எனவே கடன் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

கடன் வாங்கிய வாடிக்கையாளர்களும் என்னிடம் கடனை திருப்பிக்கொடுக்க யோசிக்கிறார்கள். அளவோடு இருந்து வளமோடு வாழுங்கள். விலைவாசி விண்ணை முட்டுகிறது. அதில் வரும் லாபம் மண்ணை கவ்வுகிறது. ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் கடை வாடகை, ஆட்கள் சம்பளம், மின்கட்டணம், ஜி.எஸ்.டி. வரி, வாங்கிய கடனுக்கு வட்டி என போட்ட முதலீட்டுக்கு லாபம் பார்க்க முடியவில்லை. கடன் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை என்ற வாசகங்களுடன் மளிகைக்கடைக்காரர் பேனர் வைத்துள்ளார்.

---


Next Story