குறுந்தொழில் முனைவோர் உண்ணாவிரதம்


குறுந்தொழில் முனைவோர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறுந்தொழில் முனைவோர் உண்ணாவிரதம்

கோயம்புத்தூர்

டாடாபாத்,

கோவையில் 'பீக் அவர்ஸ்' கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குறுந்தொழில் முனைவோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோது, தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு கூடுதலாக நிலைக்கட்டணத்தை உயர்த்தியதுடன் பீக் அவர்ஸ் கட்டணமும் விதிக்கப்பட்டது. இந்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவையில் உள்ள போசியா அமைப்பின் (கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு) சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என் று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை டாடாபாத் பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

20 தொழில் அமைப்புகள்

இதில் போசியா கூட்டமைப்பில் உள்ள டேக்ட், காஸ்மாபேன், ராசா, கொசியா, கவுமா, கொசிமா, டாக்மா, கோஸ்மா, கோப்ரா, கான்சியா உள்பட 20 குறுந்தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மேலும் இந்த போராட்டத்துக்கு பா.ஜனதா மற்றும் அன்னூர் விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

இது குறித்து போசியா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:-

'பீக் அவர்ஸ்' கட்டணம்

ஏற்கனவே பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் நாங்கள் தொழில் செய்து வருகிறோம். மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால் 112 கிலோவாட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு நிலைகட்டணமாக ரூ.35 வரை செலுத்தி வந்தோம். ஆனால் அதை தற்போது ரூ.150 ஆக உயர்த்திவிட்டனர்.

அதுபோன்று புதிதாக 'பீக் அவர்ஸ்' கட்டணம் என்பதை கொண்டு வந்து உள்ளனர். தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இருந்தபோது இதுபோன்ற கட்டணத்தை பெரிய தொழில் நிறுவனங்களுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்கிறது. எனவே இந்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ரத்து செய்ய வேண்டும்

அதன்பயனாக 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதத்தை மின்வாரியம் குறைத்தது. எங்களின் நிலைப்பாடே 'பீக் அவர்ஸ்' கட்டணத்தை ரத்து செய்வதுதான். எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாங்கள் தற்போது ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களை மூடி அந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்று உள்ளனர். இதனால் கோவை மாவட்டத்தில் ஒருநாளுக்கு ரூ.50 கோடிக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த இழப்பையும் நாங்கள் தாங்கிக்கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தொழில்துறைக்கு அறிவித்து உள்ள நிலைக்கட்டணம், 'பீக் அவர்ஸ்' கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் போசியா ஒருங்கிணைப்பாளர்கள் சிவசண்முககுமார், சுருளிவேல், ரவீந்திரன், சவுந்தர்குமார், நல்லதம்பி, சாகுல், சுரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story