சிறுதானிய விதைகளை இலவசமாக வழங்க வேண்டும்


சிறுதானிய விதைகளை இலவசமாக வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Feb 2023 6:45 PM GMT (Updated: 24 Feb 2023 6:46 PM GMT)

சிறுதானிய பாக்கெட் விதைகளை இலவசமாக வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

குறைதீர்ப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

வாடகை மையம்

சிறுதானிய விதை பாக்கெட்டுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும், மக்காச்சோளம் நடும் எந்திரம் மானிய விலையில் வழங்க வேண்டும், வன விலங்குகளால் சேதம் அடையும் பயிர்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். வனத்துறை, வேளாண், தோட்டக்கலைத்துறை, விவசாயிகள் என முத்தரப்பு கூட்டம் நடத்தி கோரிக்கைகள், குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும், சங்கராபுரம் அருகே மூலக்காடு பகுதியில் வேளாண் கருவிகள் வாடகைக்கு விடும் மையம் அமைக்க வேண்டும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள விவசாயிகளுக்கு ஏ.டி.எம்.கார்டு வழங்கவில்லை.

நோய் தடுப்பு மருந்து

கரும்பு பயிரில் நோய் தாக்குதலின்போது மருந்து கொடுப்பதற்கு முன் பாதி பயிர் சேதம் அடைந்து விடுகிறது, எனவே நோய் தடுப்பு மருந்தை முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டும். விளம்பார் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்கு ஒலி எழுப்பும் கருவிகளை வழங்கிட வேண்டும், சேஷாநதியின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும், சங்கராபுரம் தாலுகாவில் விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டைகள் சரியான முறையில் வழங்க வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டருக்கு மரக்கன்று

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய கலெக்டர், விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாய சான்றிதழை வருவாய்துறை அலுவலர்கள் விரைந்து வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க தொடர்புடைய அலவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் சிறப்பாக மேற்கொண்டமைக்காக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியிடம் மாநில அளவிலான விருதை பெற்ற கலெக்டர் ஷ்ரவன் குமாரை பாராட்டி விவசாய சங்க பிரதிநிதிகள் மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை-2 மேலாண்மை இயக்குனர் முருகேசன், மின் வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) மயில்வாகனன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story