சின்ன வெங்காயத்தை ரேஷன் கடைகள் மூலம் விற்க வேண்டும்

சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விவசாயிகள் சங்கம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்கள் உள்பட பலர் மனு அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில், கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சின்ன வெங்காயத்தின் விலை ரூ.10-க்கு கீழ் உள்ளது. கடந்த வாரம் மழை பெய்ததால் நடவு செய்து 45 நாட்களான சின்ன வெங்காயத்தை நோய் தாக்கி உள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சின்ன வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள்
தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் தூய்மை பணி மற்றும் பொதுப் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்நாடு செல்வம் தலை மையில் தூய்மை பணியாளர்கள் அளித்த மனுவில், தமிழக அரசு ஆணைப்படி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதே கருத்தை வலியுறுத்தி கோவை லேபர் யூனியன் செயலாளர் செல்வராஜ் தலைமையிலும் மனு அளிக்கப்பட்டது.இதேபோல் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.






