கலெக்டர் அலுவலகத்தில் சிறுவியாபாரிகள் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் சிறுவியாபாரிகள் தர்ணா
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சிறுவியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சிறுவியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறை தீர்ப்பு முகாம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாம் நேற்று கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. மனுக்கள் அளிக்க பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதில் தியாகி குமரன் அனைத்து காய்-கனி சிறு வியாபாரிகள் பொது நல சங்கத்தினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். பின்னர் அவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், தியாகி குமரன் மார்க்கெட்டில் நலிவடைந்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி தருமாறு மாநகராட்சியிடம் கேட்டிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் 88 பேருக்கு மட்டும் கடைகள் ஒதுக்கி தருவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். மீதமுள்ள 40 பேருக்கு எந்த வித ஏற்பாடும் செய்யவில்லை. எனவே மீதமுள்ள 40 பேருக்கும் கடைகளை ஒதுக்கி தர வேண்டும். இதற்கான நடவடிக்கையை கலெக்டர் மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

அனுமதி

விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தொண்டாமுத்தூர், தடாகம் உள்பட பகுதிகளில் அதிக அளவு விவசாய நிலங்கள் உள்ளது.

இங்கு விவசாய நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் விவசாயிகளையும் தாக்குகிறது.

இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கேரளா அரசு விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை சுட்டு கொல்ல அனுமதி அளித்துள்ளது.

அதேபோன்று தமிழக அரசும் காட்டுப் பன்றிகளை சுட்டு கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

பாதுகாப்பு கேட்டு மனு

கோவை திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை மாவட்டம் கூடலூர் திருமலை நாயக்கன்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த நிலையில் 22 பேர் மட்டும் ஒன்று சேர்ந்து ஊர் பொது மக்களுக்கு தெரியாமல் அன்னதான கமிட்டி எனக்கூறி நன்கொடை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்த போது அவர்கள் எங்களை தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே எங்களது உயிருக்கும், உடைக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

1 More update

Next Story