16 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்-சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்


16 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்-சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
x
திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே 16 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

புதிய ஸ்மார்ட் வகுப்பறைகள்

திசையன்விளை அருகே குமாரபுரம், அணைக்கரை, உறுமன்குளம், முதுமொத்தன்மொழி பஞ்சாயத்துகளில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் புதிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு தொடக்க விழா அந்தந்த பள்ளிகளில் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, மொத்தம் 16 பள்ளிகளில் புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பஞ்சாயத்து தலைவர்கள் குமாரபுரம் அனிதா பிரின்ஸ், அணைக்கரை சூசைரத்தினம், மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குமாரபுரம் பஞ்சாயத்து உபகாரமாதாபுரத்தில் ரூ.14 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு சாபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

அரசு தலைமை மருத்துவமனை

இதற்கிடையே சபாநாயகர் அப்பாவு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை உருவாக்கினார். தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க கொள்கை முடிவு எடுத்து நடவடிக்கை மேற்கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டது. அதன்பின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பாளையங்கோட்டையில் அமைந்ததால் இங்கிருந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தென்காசியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதைடுத்து தென்காசியில் செயல்பட்டு வந்த நெல்லை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை தென்காசி மாவட்டத்தின் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரத்தில் தொடங்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டது.

பணிகள் விரைவில் தொடங்கப்படும்

இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட நான் எனது தேர்தல் அறிக்கையிலும், பிரசாரத்தின்போதும் வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு நெல்லை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகமும் அமைக்கப்படும் என உறுதி அளித்தேன். இதை செயல்படுத்தும் வகையில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வள்ளியூரில் அரசு தலைமை மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். தொடர்ந்து வள்ளியூரில் அரசு தலைமை மருத்துவமனையும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தையும் அமைக்க வேண்டும் எனவும், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தேன்.

இதனை ஏற்று தமிழக அரசு வள்ளியூரில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்கவும், அதற்கான கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கவும் ரூ.31 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. இப்பணி தொடங்கப்படுவதற்காக அரசு ஒப்பந்தம் ஜனவரி 20-ந் தேதி கோரப்பட்டு விட்டது. விரைவிலேயே அனைத்து கட்டுமானப்பணிகளும் தொடங்கப்படும். மேலும் வள்ளியூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள நெல்லை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 100 படுக்கை வசதிகள், அறுவை சிகிச்சை அரங்கம், ரத்தம் சுத்திகரிப்பு செய்யக்கூடிய டயாலிசிஸ் வசதி, கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அறை, எக்ஸ்ரே, ஸ்கேன், தனி கட்டிடத்தில் ரத்த பரிசோதனை, ரத்தவங்கி, விபத்து சிகிச்சை பிரிவு, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story