சாலையோரத்தில் குப்பைகளை கொளுத்துவதால் புகைமூட்டம்


சாலையோரத்தில் குப்பைகளை கொளுத்துவதால் புகைமூட்டம்
x

திருவலஞ்சுழியில் சாலையோரத்தில் குப்பைகளை கொளுத்துவதால் ஏற்படும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

திருவலஞ்சுழியில் சாலையோரத்தில் குப்பைகளை கொளுத்துவதால் ஏற்படும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகள்

கபிஸ்தலத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் திருவலஞ்சுழி பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த சாலையின் வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்த வழியாக சென்று வருகின்றனர். மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த சாலை வழியாக ஏராளமானோர் நடைபயணமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் ஆற்றின் அருகே சாலையோரத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது.

தீயிட்டு கொளுத்துகின்றனர்

இவ்வாறு குவிந்து காணப்படும் குப்பைகள் காற்று வீசும் நேரத்தில் பறந்து செல்கிறது. இதனால் சாலைகளில் வாகனங்களில் செல்வோர் மீது குப்பைகள் வந்து விழுகிறது. இதனால் ஒரு சிலர் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது தீயிட்டு கொளுத்துகின்றனர். அப்போது ஏற்படும் புகையால் சாலை புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதுபோன்று அடிக்கடி அருகருகே குப்பைகளை குவித்து வைத்து கொளுத்துவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் நேற்று இந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. சாலையே தெரியாத அளவிற்கு புகை காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் மெதுவாக சென்றனர்.

புகை மூட்டம்

சிலர் கண் எரிச்சல், மூச்சு திணறல் காரணமாக இறங்கி நின்று விட்டு புகை கலைந்த பின்னர் சென்றனர். புகை மூட்டம் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதும், தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் குப்பைகளை ஆங்காங்கே கொட்டும் வகையில் குப்பைத்தொட்டிகள் வைப்பதோடு, அவற்றை அவ்வப்போது அகற்றி சுகாதாரமாக இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story