உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்


உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம் குறித்து மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர்கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

அதிகரிப்பு

தமிழகத்தில் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தை சரிவர யாரும் நடைமுறைப்படுத்தாததால் பஸ் நிலையங்கள், டீக்கடைகள் என்று பொது இடங்களில் சிகரெட், புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைபிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர்களும், பொதுமக்களும் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

மாரடைப்பு

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி:-

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மாரடைப்பு ஏற்படுவதற்கும் புகை பிடிக்கும் பழக்கம் வழி வகுத்து விடுகிறது.

ஒரு முறை புகை பிடித்து விட்டு வெளியேற்றப்படும் புகையில் 4 ஆயிரம் நச்சுப்பொருட்கள் உள்ளன. மேலும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் புகை பிடிப்பதால் மனைவிக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஒருவர் எப்போது புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துகிறாரோ அந்த நிமிடம் முதல் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைந்து விடுகிறது. பல்வேறு வகைகளில் தீமையை ஏற்படுத்தும் புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

விருதுநகர் சமூக ஆர்வலர் சிவகுருநாதன்:-

புகை பிடிப்பதால் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் தேவைப்படும் ஆக்சிஜன் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இதயத்திற்கும், ரத்த நாளங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. புகைப்பிடிப்பவருக்கு மட்டுமல்லாமல் அருகில் இருப்பவருக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

புகைபிடிக்கும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. புகைபிடிப்பதை முற்றிலுமாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

ரூ.5 ஆயிரம் அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த டாக்டர் செல்வராஜன்:-

தற்போது புகைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் சிகரெட், புகையிலை பொருட்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்காதவாறு அரசு செய்ய வேண்டும். பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு அபராதத்தொகை ரூ.5,000-க்கு மேல் போட வேண்டும். இதன் மூலம் புகை பிடிக்கும் பழக்கத்தை தடுக்கலாம். மேலும் தற்பொழுது வரும் நோயாளிகளுக்கு புற்றுநோய் அதிக அளவில் தென்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் புகையிலை பொருட்கள், சிகரெட்டுகள் உபயோகிப்பது தான் காரணம் ஆகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் புற்றுநோய் தாக்குகிறது. எனவே அரசு கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும் புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

ஆரோக்கிய வாழ்வு

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியர் முருகபழனி:-

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் ஆயுள் குறைகிறது. மனிதனை கொஞ்சம், கொஞ்சமாக கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப்பழக்கம்.

புகைப்பிடிப்பவர்களுக்கு புகையிலையில் பல ரசாயனங்கள் கலந்துள்ளதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. இளைஞர்களின் நினைவுத்திறனையும், படிக்கும் திறனையும் புகைப்பழக்கம் பாதிக்கிறது. எனவே புைகப்பழக்கத்தை கைவிட்டால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

ராஜபாளையத்தை சேர்ந்த சுப்புலட்சுமி:-

பொது இடங்களில் ஆண்கள் புகைபிடிப்பதால் அருகில் உள்ளவர் மீதும் புகை பரவும் பொழுது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பஸ்சிற்காக காத்து நிற்கும் இடங்களில் புகைபிடிப்பவர்களால் எண்ணற்ற தொல்லைகளை அனுபவிக்க வேண்டியதாகிறது.

பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என தெரிந்தும் எண்ணற்ற பேர் பிடிக்கின்றனர். அதற்கான சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லையா அல்லது சட்டம் பெயரளவுக்கு செயல்படுகிறதா என்று தெரியவில்லை. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது ஆர்வம் காட்டும் காவல்துறை புகை பிடிப்பவர்கள் மீது ஆர்வம் காட்ட வில்லை. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஒரு கட்டாயம் இந்த சமூகத்தின் தேவையாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புகைப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது, 'கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன்' என்பதுதான். நெடுநாட்களாக பழகிப்போன புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட உறுதியான வைராக்கியம் தேவை. அந்த வைராக்கியம் இருந்தால் மட்டுமே, நம்மையும் மற்றவர்களையும் புகையிடம் இருந்து காப்பாற்ற முடியும்.


Next Story