சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. ௩ கோடி மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கண்டு பிடித்தனர். 6 பேரிடம் இருந்து ரூ. 2 கோடியே 34 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 267 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் அபுதாபியில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த 2 பேரின் உள்ளாடைக்களில் இருந்து ரூ. 89 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 22 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 2 நாளில் நடத்திய சோதனைகளில் ரூ. 3 கோடியே 23 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ 289 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.