கோவையில் இருந்து தேனிக்கு கடத்திய 13 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது


கோவையில் இருந்து தேனிக்கு கடத்திய  13 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது
x

கோவையில் இருந்து தேனிக்கு 13 மூட்டை புகையிலை பொருட்களை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

புகையிலை பொருட்கள் கடத்தல்

தேனி அருகே கோபாலபுரம் கிராமத்துக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில் போலீசார் கோபாலபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அந்த காரில் 11 மூட்டைகள், மோட்டார் சைக்கிள்களில் தலா ஒரு மூட்டை என மொத்தம் 13 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.

இதையடுத்து காரில் வந்த 2 பேர், மோட்டார்சைக்கிள்களில் வந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் வந்தவர்கள் கோவை மாவட்டம் குனியமுத்தூர் மூவேந்தர் நகரை சேர்ந்த நிசார் (வயது 25), நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கனிராவுத்தர் தெருவை சேர்ந்த உமர்பாரூக் (26) என்பதும், மோட்டார்சைக்கிள்களில் வந்தது கோபாலபுரத்தை சேர்ந்த கோபிநாத் (29), கண்டமனூர் ரெங்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த பிரவீன் (28) என்பதும் தெரியவந்தது.

4 பேர் கைது

அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 2 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 13 மூட்டை புகையிலை பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, இந்த புகையிலை பொருட்களை கோவையில் இருந்து கோபாலபுரத்துக்கு காரில் கடத்தி வந்ததாகவும், தேனி அருகில் வந்தவுடன் 2 மூட்டைகளை மட்டும் காரில் இருந்து மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்றி எடுத்து வந்ததாகவும் தெரியவந்தது.

கடத்தல்

இந்த கடத்தலுக்கு கோபாலபுரத்தை சேர்ந்த கணேசன், மனோஜ்குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் மனோஜ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கணேசனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

புகையிலை பொருட்களை பிடித்து, 5 பேரை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் பாராட்டினர்.


Next Story