திருச்சி விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோலாலம்பூர்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் தங்கத்தை குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களில் 6 உருளை வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது. 216 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.12 லட்சத்து 84 ஆயிரம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலில் மறைத்து...
இதேபோல் நேற்று முன்தினம் இரவு 1.30 மணி அளவில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஒரு பயணியின் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தனியாக அழைத்து சோதனை செய்ததில், அவர் தனது உடலில் மறைத்து வைத்து 191 கிராம் எடை கொண்ட தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 33 ஆயிரம் ஆகும்.
இதனையடுத்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.24 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.