துபாயில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ தங்கம் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை


துபாயில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ தங்கம் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 12 Oct 2023 8:45 PM GMT (Updated: 12 Oct 2023 8:45 PM GMT)

மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1 கிலோ தங்கம் சிக்கியது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

கழிவறையில் தங்கம்

துபாயில் இருந்து மதுரைக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த, பயணிகள் அனைவரும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பகல் 1 மணி அளவில் கழிவறை பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கழிவறையில் சந்தேகத்திற்கிடமாக உருளை வடிவில் பொருள் கிடந்தது தெரியவந்தது. அதுகுறித்து அவர்கள், சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்தபோது, பல நிறங்களில் கிடந்த 4 உருண்டைகளில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கம், ஒரு கிலோ எடை இருக்கும் எனவும், அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை

மேலும் அவர்கள் கூறுகையில், "துபாயில் இருந்து வந்த பயணிகள் சென்ற பின்னர் சோதனை செய்ததில் கடத்தல் தங்கம் சிக்கி உள்ளது. துபாயில் இருந்து வந்த பயணிகளில் யாரோ கழிவறையில் தங்கத்தை வைத்து விட்டு, மீண்டும் இலங்கை செல்லும் விமானத்தில் அதனை கடத்த திட்டமிட்டிருந்தார்களா? அல்லது அதிகாரிகளின் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக கழிவறையில் போட்டுச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. மேலும் அந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் பயணிகளின் நடமாட்டம் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது" என்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் 17-ந்தேதி கேட்பாரற்ற நிலையில் விமான நிலைய கழிவறையில் 2 கிலோ தங்கம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story