வெங்காய மூட்டைகளுக்கு நடுவே700 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்
புதுச்சத்திரம் அருகே வெங்காய மூட்டைகளுக்கு நடுவே 700 கிலோ புகையிலை பொருட்கள் மூட்டைகளை வைத்து கடத்திச் சென்ற மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரிகளில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வந்தது. இதனிடையே புதுச்சத்திரம் அருகே உள்ள பெருமாள்கோவில் மேடு பஸ் நிறுத்தம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மினி லாரியில் வெங்காய மூட்டைகளுக்கு நடுவே புகையிலைப் பொருட்கள் மூட்டைகளை வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
இதையடுத்து மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் லாரியில் இருந்த புகையிலை பொருட்களை எடை போடும் எந்திரங்களை கொண்டு அளவிடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதில் சுமார் 700 கிலோ புகையிலை பொருட்கள் மினி லாரியில் இருந்தது தெரியவந்தது. அதேபோல் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்தனை பிடித்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு புகையிலை பொருட்கள் மூட்டைகளை வெங்காய மூட்டைகளுக்கு நடுவே கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.