கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை


கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:46 PM GMT)

மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் ரேஷன் அரிசி வினியோக மையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் ரேஷன் அரிசி வினியோக மையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வரும் நிலை உள்ளது. தினசரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் என பல்வேறு துறையினரால் ரேஷன் அரிசி கடத்தல் பிடிபடும் நிலை உள்ளது. இருசக்கர வாகனம் முதல் லாரிகள் வரை கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் நிலையில் கிராமப்புறங்களில் ரேஷன் அரிசி சேகரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்படும் நிலையும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 150 டன் கடத்தப்பட்ட நிலையில் இது தொடர்பாக 175 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய அதிகாரம் இல்லாத நிலையில் அவர்கள் வாகனங்களில் கடத்தப்படும் போதும், குறிப்பிட்ட இடங்களில் பதுக்கி வைக்கப்படும் போதும் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் நிலை தொடர்கிறது. ஆனால் ரேஷன் அரிசி வினியோக மையங்களில் கண்காணிப்பு குறைபாடு காரணமாகவே ரேஷன் அரிசி, கடத்தல்காரர்கள் கையில் கிடைக்கும் நிலை உள்ளது.

கடும் நடவடிக்கை

குறிப்பாக சாத்தூர் வட்டாரத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்படும் நிலை தொடர்கிறது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக இல்லாத காரணத்தினால் தொடர்ந்து அவர்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே மாவட்ட நிர்வாகம் ரேஷன் அரிசி வினியோக மையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கையை கடுமையாக்கவும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story