ரேஷன் அரிசி கடத்தல் தொடரும் நிலை
ரேஷன் அரிசி கடத்தல் தொடரும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல் தொடரும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரிசி கடத்தல் அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சட்டம், ஒழுங்கு பிரிவு போலீசார், வருவாய்த்துறை, வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துவரும் நிலையில் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்தே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாங்குவதாக தெரிவித்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் இருந்து நேரடியாக அரிசி கடத்தப்படுவதில்லை என உறுதியாக கூறி வருகின்றனர்.
கண்காணிப்பு
இந்தநிலையில் வெம்பக்கோட்டை அருகே சுண்டங்குளம் செவலங்காடு பகுதியில் திறந்தவெளியில் எவ்வித மறைவும் இல்லாமல் 10 டன் ரேஷன் அரிசி 194 மூடைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
மறைவிடம் இல்லாமல் திறந்தவெளியில்அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பதுக்கல் என்று கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் 194 மூடைகளில் ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து சேகரிப்பது என்பது ஓரிரு நாளில் சாத்தியப்படாது. இவ்வாறு திறந்த வெளியில் ரேஷன் அரிசி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வரவில்லை என்பதும் வியப்பளிப்பதாக உள்ளது.
நடவடிக்கை
அதிலும் குறிப்பாக அந்த பகுதி உள்ளூர் போலீசாரின் கவனத்திற்கு வராமல் போனது ஏன்? என்றும் தெரியவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகமும் மாவட்ட போலீஸ் நிர்வாகமும் இதுகுறித்து உரிய முறையில் ஆய்வு செய்து கண்காணிப்பு குறைபாடு காரணமாக இவ்வாறு ரேஷன் அரிசி மூடைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்க வாய்ப்பு ஏற்பட்டதற்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.