புதுக்கடை அருகே சொகுசு காரில் ரேஷன் அரிசி கடத்தல் - போலீசார் விசாரணை
புதுக்கடை அருகே சொகுசு காரில் ரேஷன் அரிசி கடத்தி வந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை,
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய விலை மண்ணெண்ணெய் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இணையம் புத்தன்துறை பகுதியில் இருந்து புதுக்கடை வழியாக கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இதனால் புதுக்கடை அருகே வெள்ளை அம்பலம் பகுதியில் புதுக்கடை போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்தவர்கள் இருளில் தப்பி ஓடி விட்டனர். போலீசார் வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து சோதனை செய்தபோது அதன் உள்ளே இரண்டு டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட ரேஷன் அரிசியை வாகனத்துடன் உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.