ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும்


ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 July 2023 4:15 AM IST (Updated: 23 July 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும் என்று குடிமைப்பொருள் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விலையில்லாமல் பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. இதை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு கடத்தல்காரர்கள் விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க குடிமைப்பொருள் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீசார் தமிழக-கேரள எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குடிமைப்பொருள் மற்றும் குற்ற புலனாய்வு துறை சென்னை போலீஸ் ஐ.ஜி. காமினி நேற்று பொள்ளாச்சியில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் போலீசாரிடம் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

மேலும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக எல்லையில் உள்ள மீனாட்சிபுரம், கோபாலபுரம் சோதனைச்சாவடிகளில் ஐ.ஜி. காமினி ஆய்வு செய்தார். அப்போது அவர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கலை முழுமையாக தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அப்போது கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, கோவை சரக துணை சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story