ரேஷன் அரிசியை கடத்தி அரைத்து மாவு மூடைகளாக பதுக்கல், குடோனுக்கு `சீல்'
ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தி மாவாக்கி பதுக்கி வைத்திருந்த மாவு மில் மற்றும் குடோனுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தி மாவாக்கி பதுக்கி வைத்திருந்த மாவு மில் மற்றும் குடோனுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
ரேஷன் அரிசி
ராமநாதபுரம் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையில் ஏட்டுகள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி, தெய்வேந்திரன் உள்ளிட்ட போலீசார் ராமநாதபுரம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரேஷன் அரிசியை அரைத்து மாவாக மாற்றி கடத்தி செல்வதாகவும், ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி அரைத்து வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
10 ஆயிரம் கிலோ மாவு
பின்னர் பரமக்குடி அருகே வெங்கட்டங்குறிச்சியில் மாவு அரைக்கும் மில்லில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அதில் சுமார் 10 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி மாவு கடத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை அரைத்து மாவாக்கி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
இது தொடர்பாக மில் உரிமையாளர்கள் மதுரை முனிச்சாலை சந்தைப்பேட்டை பாண்டி (வயது 47), பரமக்குடி தினேஷ் (37), லோடு மேன் மதுரை மீனாட்சிபுரம் அலாவுதீன் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (48), தொழிலாளர்கள் விருதுநகர் மாவட்டம் வாகைகுளம் போர்பாண்டி (42), பரமக்குடி ராமச்சந்திரன் (29) ஆகியோரை கைது செய்தனர். இதன் பின்னர் அந்த பகுதியில் போலீசார் தங்கள் கண்காணிப்பு பணியை தீவிரபடுத்தியிருந்தனர்.
சீல்
இந்நிலையில் மீண்டும் அதே மில்லில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது அங்கு ரேஷன் அரிசியை அரைத்து வைத்திருந்த 5 ஆயிரம் கிலோ மாவினை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக பாண்டி, தினேஷ், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதுபோன்று ரேஷன் அரிசியை வாங்கி வந்து மாவாக அரைத்து நாமக்கல், ஈரோடு போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் கோழிகளுக்கு தீவனமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவு மில் மற்றும் குடோன் ஆகியவற்றிற்கு போலீசார் சீல் வைத்தனர்.