நெல்லைக்கு லாரியில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தல்; 4 பேர் கைது


நெல்லைக்கு லாரியில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தல்; 4 பேர் கைது
x

பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள் கடத்தல்

நெல்லை -நாகர்கோவில் ரோட்டில் ஜோதிபுரம் விலக்கு பகுதியில் சாலையோரத்தில் ஒரு லாரியில் இருந்து லோடு ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இறக்கப்படுவதாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் லாரி மற்றும் லோடு ஆட்டோவையும், அதில் இருந்தவர்களையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை அம்பை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

4 பேர் கைது

அவர்களிடம் நடத்திய விசாரணையில் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த தியாகராஜ் (வயது 29), அம்பை அயன் திருவாலீஸ்வரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி (30), அம்பை அண்ணா நகரை சேர்ந்த டேனிஷ் எடிசன் (24), சூரியமாதவன் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களில் தியாகராஜ் லாரி டிரைவர், டேனிஷ் எடிசன் லோடு ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து, அம்பை பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்ல முயற்சி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். லாரி, லோடு ஆட்டோ மற்றும் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 529 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story