திருக்கோவிலூர் அருகேமொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்தல் :மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்திய மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்னா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்று பாலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மொபட்டை நிறுத்தி, அதை ஓட்டிவந்தவரிடம் விசாரித்தனர். அதில் அவர் சின்ன மணிந்தல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் அய்யனார் (வயது 36) என்பது தெரியவந்தது. மேலும் அவர் எடுத்து வந்த பையை சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. 28 கிலோ புகையிலை பொருட்களை மணலூர்பேட்டையில் உள்ள ஒரு மளிகை கடைக்கு அவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அய்யனாரை கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள், மொபட் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர். மேலும், மளிகை கடை உரிமையாளர் முகமது இத்ரிஷ் (45) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.