மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு


மொபட்டில் சென்ற பெண்ணிடம்  6 பவுன் சங்கிலி பறிப்பு
x

திருப்பூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் 6 பவுன் சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த நபர் பறித்துச்சென்றார்.

திருப்பூர்

திருப்பூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் 6 பவுன் சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த நபர் பறித்துச்சென்றார்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி திவ்யா (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த புதுப்பாளையம் கைத்தலான்தோட்டம் பகுதியில் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் ரமேஷ் வேலை பார்த்து வருகிறார். குழந்தைகள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை திவ்யா தனது குழந்தைகளை அருகில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு, மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம ஆசாமி திடீரென திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம ஆசாமி சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து திவ்யா திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே பட்டப்பகலில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Related Tags :
Next Story