கோபியில் கனவுத்தொல்லையால் விபரீதம்: ஜோதிடரின் வாக்கை நம்பி பாம்பின் வாயில் வாய் வைத்து ஊதிய விவசாயி


கோபியில் கனவுத்தொல்லையால் விபரீதம்: ஜோதிடரின் வாக்கை நம்பி பாம்பின் வாயில் வாய் வைத்து ஊதிய விவசாயி
x

கோபியில் கனவுத்தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் ஜோதிடரின் வாக்கை நம்பி பாம்பின் வாயில் வாய் வைத்து ஊதினார்.

ஈரோடு

கோபியில் கனவுத்தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் ஜோதிடரின் வாக்கை நம்பி பாம்பின் வாயில் வாய் வைத்து ஊதினார்.

விவசாயி

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நன்றாக தூங்கியபோது அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் பாம்பு ஒன்று அவர் உடலில் ஊர்ந்து செல்வதுபோல உணர்ந்தார். அது அவருக்கு மறக்க முடியாத கனவாக இருந்தது. அதைத்தொடர்ந்து 2-வது நாள், 2 பாம்புகள் பின்னிப்பிணைந்து படம் எடுத்து ஆடுவது போன்று கனவு கண்டார். அது அவருக்கு அச்சத்தை கொடுத்தது. 3-வது நாளும் அவர் உறங்கியபோது மீண்டும் பாம்பு கனவு வந்தது. அவரது காலில் பாம்பு சுற்றிக்கொண்டதாக அவர் கனவு கண்டபோது, கடுமையாக பயந்து அலறினார்.

இதுபற்றி அவர் குடும்பத்தினரிடம் கூறினார். அவர்களும் தொடர்ந்து பாம்பு கனவு வருவது ஏன் என்ற குழப்பத்தில், அவர்களின் குடும்ப ஜோதிடர் ஒருவரை அணுகினார்கள். கனவு விவரங்களை கேட்ட ஜோதிடர், இதற்கு நாக தோஷம்தான் காரணம். இதற்கு நாகசாந்தி பூஜை செய்ய வேண்டும். இதற்கு நமக்கு தெரிந்த ஒரு கோவில் உள்ளது. அங்கு சென்றால் பூஜை செய்து, பிரச்சினை எதுவும் வராமல் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார். ஜோதிடரின் வாக்கை நம்பி, குறிப்பிட்ட கோவிலுக்கு விவசாயி சென்றார். அங்கு ஜோதிடர் கூறிய பூசாரியை சந்தித்தார். அவரும் விவசாயியிடம் கனவு விவரங்களை கேட்டு அறிந்தார்.

வாயை வைத்து ஊதினார்

முதல்நாளில் கனவில் வந்தது நாகப்பாம்பு, 2-ம் நாள் கனவில் வந்தது நாகம் மற்றும் சாரைப்பாம்பு, 3-ம் நாள் கனவில் வந்தது கண்ணாடி விரியன் பாம்பு. இதில் 3-வதாக வந்த கண்ணாடி விரியன் பாம்பை வைத்து பூஜை செய்தால் அனைத்து தோஷங்களும் சென்று விடும் என்று கூறினார். உடனே விவசாயியும் பூஜைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டார்.

பின்னர் பூசாரி ஒரு கண்ணாடி விரியன் பாம்புடன் வந்து, பூஜை செய்தார். பூஜையின் முடிவில், விவசாயியிடம் பாம்பின் வாயில் 3 முறை உங்கள் வாயை வைத்து ஊத வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். கனவில் பாம்பு வந்த பீதியில் இருந்து வெளியே வராமல் மனதளவில் கஷ்டப்பட்டு வந்த விவசாயி, ஜோதிடரும், பூசாரியும் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருந்தார். பூசாரி கண்ணாடி விரியன் பாம்பை கையில் பிடித்துக்கொண்டு விவசாயியின் முன்னால் நீட்டினார். அவரும் பாம்பின் வாயில் தனது வாயை வைத்து ஊதினார். முதல் முறை வெற்றிகரமாக முடித்தார். 2-வது முறையும் அதுபோன்று கண்ணாடி விரியன் பாம்பின் வாயில் வாய் வைத்து முத்தம் கொடுப்பது போன்று ஊதினார். பாம்பு அசையாமல் இருந்தது. 3-வது முறை, ஜோதிடரும், பூசாரியும் உற்சாகப்படுத்த, விவசாயியும் நாக்கை நீட்டிக்கொண்டு பாம்பின் வாய் அருகே சென்று ஊத தயாரானார்.

பாம்பு கடித்தது

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் விவசாயியின் நாக்கில் பாம்பு கடித்தது. வினாடி நேரத்தில் நடந்து முடிந்த விட்ட இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயியின் நாக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அவர் பயத்தில் அலறினார். உடனடியாக அவரை சமாதானப்படுத்திய, பூசாரி அவரது கையில் இருந்த ஒரு கத்தியால், விவசாயிக்கு பாம்பு கடித்த நாக்கில் கீறி விட்டார். இதனால் ரத்தப்போக்கு அதிகமானது. ஒரு புறம் பாம்பு கடித்த பயம். இன்னொரு புறம் அதிக ரத்தபோக்கு. விவசாயி மயக்க நிலைக்கு சென்றார். அதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர் செந்தில்குமரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடனடியாக முதல் உதவி நடவடிக்கைகள் எடுத்தனர்.

சிகிச்சை

விவசாயியின் நாக்கு வெட்டுண்டு தொங்கிக்கொண்டு இருந்தது. எனவே அவரால் வாய் மூலமாகவும் சுவாசிக்க முடியவில்லை. ரத்த கசிவு நுரையீரலுக்கு சென்று கொண்டிருந்தது. காயம் காரணமாக நாக்கு வீக்கம் அடைந்து விவசாயியின் முகம் கோரநிலையில் காணப்பட்டது. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மருத்துவக்குழுவினர் செயற்றை சுவாசம் வழங்கி, சிகிச்சை செய்தனர்.

அவரது கிழிந்த நாக்கு தைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. உடலில் பாம்பு விஷம் பரவுவதும் தடுக்கப்பட்டது. கடுமையான போராட்டத்துக்கு பின்னர், சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. 3-வது நாளில் இயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. 7-வது நாளில் கட்டுகள் பிரிக்கப்பட்டது. டாக்டர்களின் போராட்டத்தால், உயிருக்கு போராடிய விவசாயி காப்பாற்றப்பட்டார். தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறும்போது, பாம்புகள் குறித்த கட்டுக்கதை, மூடநம்பிக்கைகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினார்கள்.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜோதிடர் மற்றும் பூசாரிக்கு தொடர்பு உள்ளதா? பூசாரிக்கு பாம்பு எப்படி கிடைத்தது, அதிக விஷம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பினை அவர் எப்படி பிடித்து கையில் வைத்திருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து உள்ளன.


Next Story