ஊமாரெட்டியூரில் நூலகத்துக்குள் அடிக்கடி புகுந்து அச்சுறுத்தும் பாம்புகள்- இடம் மாற்றித்தர வாசகர்கள் கோரிக்கை
ஊமாரெட்டியூரில் அடிக்கடி நூலகத்துக்குள் புகுந்து பாம்புகள் அச்சுறுத்துகின்றன. இடம் மாற்றித்தர வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மாபேட்டை
ஊமாரெட்டியூரில் அடிக்கடி நூலகத்துக்குள் புகுந்து பாம்புகள் அச்சுறுத்துகின்றன. இடம் மாற்றித்தர வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூலகம்
அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரில் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நூலகத்துக்கு சென்று படித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களும் நூலகத்திற்கு சென்று பொது அறிவு புத்தகங்களை படித்து வருகின்றனர். நூலகம் அருகே பெண்கள் பயன்படுத்தும் பொது கழிப்பிடமும் உள்ளது.
இந்த இடம் அருகே இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல பயன்படும் ரதம் நிறுத்தும் கட்டிடம் இருக்கிறது.
தற்போது இந்த கட்டிடம் முழுவதும் பழுதடைந்து விட்டது. ரதமும் பயன்படுத்த முடியாத நிலையில் உடைந்து காணப்படுகிறது. அந்த இடம் முழுவதும் புதர் மண்டி பாம்புகள் வாழும் புகழிடமாக உள்ளது.
கோரிக்கை
இந்தநிலையில் நேற்று முன்தினம் வாசகர்கள் நூலகத்திற்குள் படித்து கொண்டு இருந்தார்கள். அப்போது பழுதடைந்த கட்டிடத்தில் இருந்து சுமார் 3½ அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஊர்ந்து நூலகத்துக்குள் புகுந்துவிட்டது. இதனால் படித்து கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்து வௌியே ஓடினார்கள்.
இதுகுறித்து வாசகர்கள் கூறும்போது, அடிக்கடி அருகே உள்ள புதரில் இருந்து நாகப்பாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சாரைப்பாம்பு நூலகத்துக்குள் புகுந்துவிடுகின்றன.
மேலும் அருகே உள்ள பெண்கள் கழிப்பறைக்கும் சென்றுவிடுகின்றன. இதனால் பெண்கள் கழிப்பறையை பயன்படுத்தவே அச்சப்படுகிறார்கள். எனவே அருகே உள்ள பழைய கட்டிடத்தை இடித்து அகற்றவேண்டும். புதர்களை அகற்ற வேண்டும். மேலும் நூலகத்தை அருகே உள்ள பள்ளியில் இருக்கும் ஏதாவது ஒரு அறைக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.