சிவகிரி அருகே பழப்பூசையன் கோவிலில் படமெடுத்து ஆடிய வெள்ளை நாகம்


சிவகிரி அருகே பழப்பூசையன் கோவிலில் படமெடுத்து ஆடிய வெள்ளை நாகம்
x

சிவகிரி அருகே பழப்பூசையன் கோவிலில் படமெடுத்து ஆடிய வெள்ளை நாகம்

ஈரோடு

சிவகிரி

சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையம் பூலாங்காட்டில் பழப்பூசையன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மூலவர் பழப்பூசையன் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. அமாவாசை, கிருத்திகை, பவுர்ணமி ஆகிய நாட்களில் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி அன்று இந்த கோவிலிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தோட்டத்தின் நடுவில் கோவில் அமைந்து உள்ளதால் அந்த பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும்.

இந்த கோவிலின் பூசாரியாக மாரப்பம்பாளையத்தை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் தினமும் காலை 9 மணிக்கு கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு பூஜைக்கு செல்லும்போது மூலவரான பழப்பூசையன் அருகிலோ அல்லது கோவில் வாசல் படியிலோ சுமார் 4½ அடி நீளம் உள்ள வெள்ளைநாகம் அடிக்கடி தென்படுவதாகவும், பூஜை செய்யப்போகும்போது அந்த பாம்பு காட்டுக்குள் ஊர்ந்து சென்று விடுவதாகவும் கூறி வந்து உள்ளார். வழக்கமாக செவ்வாய்க்கிழமையான நேற்றும் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக பூசாரி பொன்னம்பலம் சென்று உள்ளார்.

அப்போது கோவில் வாசல்படியில் வெள்ளை நாகம் படுத்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். மேலும் அவரை கண்டதும் பாம்பு படம் எடுத்து ஆடி உள்ளது. இதனால் அவர் பயந்துபோய் அருகில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை அழைத்து கோவிலுக்கு வந்து உள்ளார். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த பாம்பை காணவில்லை.

இதனால் பூசாரியுடன் வந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். அப்போது மூலவர் அமைந்துள்ள கோவிலுக்கு முன்பாக உள்ள சிமெண்டு அட்டை போட்ட மேற்கூரை மீது நெளிந்்து சென்று கொண்டிருந்த வெள்ளை பாம்பை கண்டனர். மேற்கூரையில் இருந்ததால் பாம்பை விரட்ட யாரும் முன் வரவில்லை. அதில் வந்த ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனில் மேற்கூரையில் வெள்ளை பாம்பு ஊர்ந்து சென்றதை வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வெள்ளை நாகம் மேற்கூரையில் உள்ள பொந்துக்குள் நுழைந்து மறைந்துவிட்டது. இன்னும் 10 நாட்களில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் வெள்ளை நாகம் படம் எடுத்த காட்சி அளித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பக்தர்களை பக்தி பரவசம் அடைய செய்து உள்ளது.


Next Story