எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்; 2 பேர் படுகாயம்
எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்; 2 பேர் படுகாயம்
கோவில்பாளையம்
கோவை அருகே உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3-ம் ஆண்டு மாணவர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரை சேர்ந்த 20 வயதான வாலிபர் கோவையை அடுத்த சரவணம்பட்டி குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். பார்மசி கல்லூரியில் 3-ம் ஆண்டு டி.பார்ம் படித்து வருகிறார். இதற்காக அவர் சரவணம்பட்டி பகுதியில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அந்த மாணவர் கல்லூரியின் மாடிப்படியில் அமர்ந்து இருந்து சக மாணவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் உள்பட சில மாணவர்கள் மாடிப்படியில் நடந்து வந்தனர். அதில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவர் கையில் மிதித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அன்று இரவு அந்த மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக்குறிச்சி மாணவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து மறுநாள் கல்லூரிக்கு சென்ற கள்ளக்குறிச்சி மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை மிரட்டிய மாணவரிடம் கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து மற்ற மாணவர்கள் அவர்களிடம் பேசி அழைத்துச்சென்றனர்.
சமரசம் பேச அழைப்பு
தொடர்ந்து கடந்த 12-ந் தேதி இரவில் கையில் மிதித்துச்சென்ற அந்த மாணவர், கள்ளக்குறிச்சி மாணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு குரும்பபாளையத்தில் உள்ள எனது அறைக்கு வாருங்கள், நாம் சமரசம் பேசலாம் என்று அழைத்து உள்ளார். இதையடுத்து அந்த மாணவர் தன்னுடன் படித்து வரும் மாணவர் மற்றும் நண்பர் என 3 பேரும் அந்த குரும்பபாளையத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்குள்ள அறையில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்து உள்ளனர்.
சரமாரி தாக்குதல்
அப்போது அங்கிருந்த மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாணவர் உள்பட 3 பேரையும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அந்தப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் கள்ளக்குறிச்சி மாணவர் உள்பட 3 பேரை தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.