அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.11 லட்சம் பேர் விண்ணப்பம்
163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதைத்தொடர்ந்து உயர்கல்வி படிப்பில் சேர மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர். மேலும் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர கணினி மையங்கள், செல்போன் அல்லது மடிக்கணினி மூலம் இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்.சி, பி.காம், பிபிஏ., பிசிஏ., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளில் சேர இதுவரை 3.11 லட்சம் பேர் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது வருகிற 7-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் கலை, அறிவியல் படிப்புகளில் சேர இன்னும் நிறைய மாணவ-மாணவிகள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு கல்லூரிகளை பொறுத்தவரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்த பின் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.