இதுவரை பெண்கள் உள்பட 436 பேர் கைது
கனியாமூர் கலவர வழக்கில் இதுவரை 2 பெண்கள் உள்பட 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
436 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற 23 கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக 4 பிரிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 407 ஆண்கள், 2 பெண்கள், 27 சிறுவர்கள் என மொத்தம் 436 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
இதில் காவல்துறை வாகனங்கள் மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்தியது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 12 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 கொலை, கொள்ளை வழக்குகள்
195 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 வழக்குகளில் சம்பந்தபட்ட நபர்கள் மற்றும் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் ரூ.2 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரத்து 283 மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடுபோனதில் சுமார் ரூ.1 கோடியே 27 லட்சத்து 77 மதிப்புள்ள நகை, பணம் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 21 கொலை, கொள்ளை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் கொள்ளைபோன ரூ.1 கோடியே 61 லட்சத்து 4 ஆயிரத்து 450 சொத்துக்களில் ரூ.93 லட்சத்து 46 ஆயிரத்து 75 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பிரிவு 110-ன் படி, 20 பேரை கைது செய்து உட் கோட்ட நிர்வாக நடுவர்கள் முன் ஆஜர்படுத்தி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
110 வாகனங்கள் பறிமுதல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 61 பேர் தற்காப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். 115 மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 பொக்லைன் எந்திரங்கள், 6 டிப்பர் லாரி உள்பட 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 29 லாட்டரி சீ்ட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 35 பேர் கைது செய்யப்பட்டு ரூ.18 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா விற்ற மற்றும் கடத்திய குற்றத்தில் ஈடுபட்ட 142 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 121 பேரை கைது செய்யப்பட்டு சுமார் 52 கிலோ கஞ்சா மற்றும் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
68 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்ற 33 ரவுடிகள், தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 27 பேர், போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட 2 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பேர், திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 4 பேர் என மொத்தம் 68 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4,150 இடங்கள்
சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 162 பேர் மீது 38 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ரூ.91 ஆயிரத்து 880 கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர் குற்றம் நடைபெறும் 4,150 இடங்களை கண்டறிந்து அதில் 3,250 இடங்களில் 4,059 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு, மதுவிலக்கு மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.