நகைக்கடை மோசடி குறித்து மாவட்டத்தில் இதுவரை 559 புகார்கள்
நகைக்கடை மோசடி குறித்து மாவட்டத்தில் இதுவரை 559 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
நகைக்கடை மோசடி குறித்து மாவட்டத்தில் இதுவரை 559 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
நகைக்கடை
திருச்சி-கரூர் பைபாஸ்ரோட்டில் கே.டி.ஜங்ஷன் அருகே பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் இயக்குனர்களாக இருந்து நடத்தி வருகிறார்கள். திருச்சி, மதுரை, சென்னை, கோவை, நாகர்கோவில், கும்பகோணம் ஆகிய இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடையின் கவர்ச்சிக்கரமான அறிவிப்புகளை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்தனர். இதையடுத்து முதிர்வுகாலம் முடிந்ததும், வாடிக்கையாளர்கள் ஜூவல்லரிக்கு சென்று பணத்தை திருப்பி கேட்டபோது, தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
559 பேர் புகார்
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரணவ் ஜூவல்லரி திடீரென மூடப்பட்டது. அதன் உரிமையாளர்கள் மதன் மற்றும் கார்த்திகா ஆகியோர் தலைமறைவாகினர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து வருகிறார்கள். இதுவரை திருச்சி மாவட்டத்தில் மட்டும் 559 பேர் புகார்கள் அளித்துள்ளதாகவும், ரூ.25 கோடியே 90 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் பிரணவ் ஜூவல்லரி நிறுவனத்திடம் பணம் கட்டியும், நகைகளை கொடுத்தும் ஏமாந்த மக்களுக்கு மீட்டு தர வேண்டும், தமிழக அரசு இதற்கென தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழுவின் சார்பில் நாளை ( வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.