சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில் புதிதாக வாய்க்கால் அமைக்கும் பணி


சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில் புதிதாக வாய்க்கால் அமைக்கும் பணி
x

ராமேசுவரத்தில் சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில் புதிதாக வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில் புதிதாக வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

வாருகால் அமைக்கும் பணி

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலமாக ராமேசுவரம் விளங்கி வருகிறது. அதுபோல் ராமேசுவரம் பகுதியில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிய பின்னர் குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவு மழை பெய்யும். இதுபோன்று மழை சீசனில் ராமேசுவரம் கோவில் பஸ் நிலையம் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான கிராம திட்டக்குடி முதல் சீதா தீர்த்தம் வரையிலும் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கி நிற்பது தொடர்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் ராமேசுவரம் சீதா தீர்த்தம் முதல் திட்டக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக சாலையின் இருபுறமும் புதிதாக மழைநீர் செல்ல வசதியாக தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் வாருகால் அமைக்கும் பணியானது தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சீதாதீர்த்தம் அருகே உள்ள சாலையின் ஒரு பகுதியில் இருந்து 1 மீட்டர் அகலத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு அதில் கான்கீரிட் கலவைகளால் தளம் அமைத்து வாருகால் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

புதிதாக பணி

இது பற்றி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும் போது. ராமேசுவரத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் வாருகால் வழியாக செல்ல வசதியாக புதிதாக வாருகால் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சீதா தீர்த்தம் முதல் திட்டக்குடி வரையிலும் 700 மீட்டர் தூரத்திற்கு சாலை இருபுறமும் வாருகால் கட்டப்பட உள்ளது. இதை தவிர்த்து மழை நீர் தேங்கி நிற்கும் மற்ற இடங்களிலும் வாருகால் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை மழை சீசன் தொடங்கும் முன்பு விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். பணி முடியும் பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்க வாய்ப்புகள் இல்லை என்றார். ஏற்கனவே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாருகால் அமைக்கப்பட்டு அதை சரியாக பராமரிக்காமல் விட்டதோடு தற்போது அந்த வாருகாலை உடைத்து புதிதாக அமைத்து வருகின்றனர். இந்த வாருகாலையாவது முறையாக பராமரித்து சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில் பணிகளை தரமாக செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story