குடிநீர் தொட்டிகளில் சோப்பு ஆயில் கலந்த விவகாரம்: அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 3 பேர் கைது
கரூர் அருகே குடிநீர் தொட்டிகளில் சோப்பு ஆயில் கலந்த விவகாரத்தில் வீரணம்பட்டி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோப்பு ஆயில் கலப்பு
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள 3 குடிநீர் தொட்டிகளில் கடந்த 11-ந்தேதி இரவு மர்மநபர்கள் சோப்பு ஆயிலை கலந்து விட்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீசார், தடயவியல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி, சோப்பு ஆயில் கலக்கப்பட்ட 3 குடிநீர் தொட்டிகளும் அங்கிருந்து அகற்றப்பட்டு, புதிதாக 3 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டன. மேலும் பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன.
முன்னாள் மாணவர்கள்
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் வீரணம்பட்டி அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 4 பேர் சேர்ந்து குடிநீர் தொட்டிகளில் சோப்பு ஆயிலை கலந்தது தெரியவந்தது. மேலும் அந்த மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு, மேல் படிப்புக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததாகவும், பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை திட்டியதாகவும், அதனால் அவரின் மீது உள்ள கோபத்தில் குடிநீர் தொட்டிகளில் சோப்பு ஆயிலை கலந்ததும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து 4 மாணவர்கள் மீதும் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 3 பேரை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.