நீட் தேர்வால் சமூக நீதிக்கு பாதிப்பு இல்லை

நீட் தேர்வால் சமூக நீதிக்கு பாதிப்பு இல்லை என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
நீட் தேர்வால் சமூக நீதிக்கு பாதிப்பு இல்லை என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
மருத்துவ கல்வியின் தரம்
பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மருத்துவ கல்வியின் தரம் குறைந்து விடக்கூடாது, அதே நேரத்தில் திறமையான மாணவர்களின் டாக்டர் கனவும் தகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, நீட் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து வருகிறது. அதில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்களின் பங்கேற்பும், தேர்ச்சியும் அதிகரித்து வருகிறது.
பொய் வாக்குறுதி
ஆனாலும், இந்தி வெறுப்பு, திராவிட இனவாதம் போல, நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்திடுவோம். அதற்கான ரகசியம் எனக்கு தெரியும் என்றார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் பொய்யான வாக்குறுதி அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.
இடஒதுக்கீடு முறை
நீட் தேர்வால் இடஒதுக்கீடு முறையில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. மத்திய பா.ஜனதா அரசின் வழிகாட்டுதலில், அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அகில இந்திய தொகுப்பு ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பு (ஓ.பி.சி.) மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் 2021-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். எனவே, நீட் தேர்வால் சமூக நீதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில், அரசியலுக்காக நாட்டின் சொத்தான மாணவர்களின் எதிர்காலத்தோடு, அவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.






