தமிழகத்தின் முதல் ஆதிதிராவிடர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்


தமிழகத்தின் முதல் ஆதிதிராவிடர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்
x

மடத்துக்குளத்தை அடுத்த பெருமாள்புதூர் பகுதியில் தமிழகத்தின் முதல் ஆதிதிராவிடர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருப்பூர்

மடத்துக்குளத்தை அடுத்த பெருமாள்புதூர் பகுதியில் தமிழகத்தின் முதல் ஆதிதிராவிடர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களை திறந்துவைத்தனர்.

விழாவுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். விழாவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களை திறந்து வைத்தும், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நகர்ப்புற ஆரம்பர சுகாதார மையக்கட்டிடம் உள்ளிட்ட ரூ.47 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

பயிற்சி வகுப்பு

அந்த வகையில் தமிழகத்திலேயே முதல்முறையாக மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் குமரலிங்கம் பேரூராட்சி குமரலிங்கம் கிழக்கு ஆதிதிராவிடர் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம், பெருமாள்புதூரில் புதிய ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தனர். மேலும் உடுமலை ஒன்றியம் பெரிய பாப்பனூத்து ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், போடிப்பட்டியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

மேலும் உடுமலை நகராட்சி இராமசாமி நகரில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடுமலை நகராட்சி பார்க் பள்ளி வளாகத்தில் வேலை வாய்ப்புத்துறை சார்பில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், துணைப்பதிவாளர்கள் (பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள்) பழனிச்சாமி, சைமன் சார்லஸ், குமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் சர்மிளா பானு ஜாகீர் உசேன், துணைத்தலைவர் அழகர்சாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர்கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story