கைக்குழந்தையுடன் சாப்ட்வேர் என்ஜினீயர் தம்பதி பலி
வேப்பூர் அருகே ஆற்று பாலத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கைக்குழந்தையுடன் சாப்ட்வேர் என்ஜினீயர் தம்பதி பலியாகினர். அவருடன் சென்ற பெண்ணும் விபத்தில் படுகாயமடைந்து இறந்தார்
ராமநத்தம்
சாப்ட்வேர் என்ஜினீயர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அஜித்(வயது 27). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் சென்னையில் மற்றொரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த திண்டுக்கல் நாகல்நகரையை சேர்ந்த ரமேஷ்பாபு மகள் மதுமிதா(26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜனனியா பிரித்தி(1½) என்ற மகள் இருந்தாள். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்த அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்தமாக ஒரு காரை வாங்கினார். இந்த நிலையில் மதுமிதாவின் தாய் தமிழ்ச்செல்வி(47), மகளை பார்க்க சென்னைக்கு சென்றிருந்தார். இவர் திண்டுக்கல்லில் அங்கன்வாடி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
தறிகெட்டு ஓடிய கார்
இதையடுத்து அஜித் தான் வாங்கிய காரில் தனது மகள், மனைவி, மாமியாருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.நேற்று அதிகாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சேப்பாக்கம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடி, கோமுகி ஆற்று பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
4 பேர் பலி
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த அஜித், மதுமிதா, குழந்தை ஜனனியா பிரித்தி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வியை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் சொந்த ஊருக்கு சென்ற போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.