65 ஊராட்சிகளில் மண்வள அட்டைசெயலி மூலம் மாதிரிகள் சேகரிப்பு


65 ஊராட்சிகளில் மண்வள அட்டைசெயலி மூலம் மாதிரிகள் சேகரிப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் 65 ஊராட்சிகளில் மண்வள அட்டை செயலி மூலம் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

65 ஊராட்சிகள் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கு 65 கிராம ஊராட்சிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு உள்ளன. இக்கிராமங்களில் மண்மாதிரிகள் புதிய முறையில் சேகரம் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடப்பாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மண்வளத்திட்டம் மூலம் 100 மண் மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டு வருகிறது. மண்வள அட்டை செயலி என்ற மத்திய அரசின் செயலி மூலம் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, புல எண்கள் வாரியாக மண் மாதிரிகள் விரைவு பதில் குறியீடு முறையில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஒரு ஏக்கர் நிலத்தில் 4 முதல் 5 இடங்களில் வி வடிவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களின் வேர் ஆழத்திற்கேற்ப வெட்டி, வெட்டிய மண்ணை வெளியே போட வேண்டும். வெட்டு ஓரங்களில் 2 இன்ச் அளவில் செதுக்கி அதனை கால் பங்கீட்டு முறையில் அரை கிலோவாக மாற்ற வேண்டும். முக்கியமாக ரசாயன உரங்கள், மக்கிய எரு, குப்பை, உரங்கள், பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லி மருந்துகள் இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வயலின் வரப்பு பகுதிகள், கிணற்றுப்பகுதி இவற்றில் மண்மாதிரி எடுத்தல் கூடாது. நிலம் தரிசாக இருந்தால் மண்மாதிரிகள் எடுக்கலாம்.

மண்வள அட்டை

கலைஞர் திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் அப்பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலரை அணுகி விவசாயி பெயர், செல்போன் எண், ஆதார் எண், சாகுபடி பரப்பு, சர்வே எண், சாகுபடி பயிர், மகசூல் அகிய விவரங்களுடன் மண்மாதிரி அரை கிலோ என்கிற அளவில் கொடுத்து ஆய்வு செய்து மண்வள அட்டை பெற்று மண்வள அட்டையின் பரிந்துரையின்படி, ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தி, மண்வளம் காத்து அதிக மகசூல் பெற்று பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story