திருவெண்காடு- நெய்தவாசல் சாலையில் மண் அரிப்பு
திருவெண்காடு-நெய்தவாசல் சாலையில் மண் அரிப்பை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு-நெய்தவாசல் சாலையில் மண் அரிப்பை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன மழை
திருவெண்காட்டில் இருந்து நெய்தவாசல் வழியாக பூம்புகார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை நெடுஞ்சாலை துறை பராமரிப்பின் கீழ் உள்ளது. இந்த சாலையின் வழியாக புது குப்பம், நாயக்கர் குப்பம், கடைக்காடு, மடத்துக்குப்பம், சாவடிகுப்பம், பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தினமும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்த சாலையின் அருகே சிங்கார வடிகால் வாய்க்கால் ஓடுகிறது. கடந்த வாரம் பெய்த கன மழையால் சிங்கார வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. இதனால் சாலையை தாண்டி தண்ணீர் சென்றது.
மண் அரிப்பு
இதன் காரணமாக நெய்த வாசல் கிராமத்தில் சாலையின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த சாலையில் போக்குவரத்து அதிக அளவில் நடைபெறுவதால் மண் அரிப்பு அதிக அளவில் ஏற்பட்டு கரையில் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை நிலை நீடித்தால் சாலை முழுவதும் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிக்கப்படலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறையினர் சாலையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.