சிறப்பு மண் பரிசோதனை முகாம்கள்


சிறப்பு மண் பரிசோதனை முகாம்கள்
x

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி தொடங்கி சிறப்பு மண் பரிசோதனை முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மண்வள அட்டை

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண்பரிசோதன நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண் வள அட்டை உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

மண் பரிசோதனை வாகனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களின் மண்ணில் உள்ள கார-அமிலத்தன்மை மற்றும் தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவு, பயிரிடப்படும் பயிர்களுக்கான உரப்பரிந்துரை மற்றும் பிரச்சினைக்குரிய மண் வகைகளுக்கு மேலாண்மை முறைகள் ஆகியவற்றை மண் மாதிரியினை ஆய்வு செய்து அதற்கேற்ப உரமிட்டு சாகுபடி செலவை குறைக்கலாம்.

நீர் மாதிரியின் கார-அமிலத்தன்மை, கரையும் உப்புக்களின் அளவு, நேர் மற்றும் எதிர் அயனிகளின் அளவு ஆய்வு செய்யப்பட்டு நீரின் வகைப்பாடு மற்றும் நீரின் தன்மைக்கேற்ப சாகுபடி பயிர்கள், பிரச்சினைக்குரிய நீரின் மேலாண்மை முறைகள் தெரிவிக்கப்படும்.

இயற்கை உரங்கள்

நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 958 மண் மாதிரிகளும், 150 நீர் மாதிரிகளும் ஆய்வு செய்து முடிவுகள் மண்வள அட்டையாக வழங்கப்பட்டு உள்ளன. ஆய்விற்கு மண் மாதிரியினை விவசாயிகள் தரும்போது அதனுடன் விவசாயியின் பெயர் மற்றும் முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், சர்வே எண் மற்றும் சாகுபடி பயிர் ஆகிய விவரங்களை தெரிவித்திட வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் வசந்தபுரத்தில் மண்பரிசோதனை நிலையமும், திருச்செங்கோடு நாராயணபாளையத்தில் நடமாடும் மண்பரிசோதனை ஆய்வகமும் இயங்கி வருகின்றது. இந்த ஆய்வகங்களை பயன்படுத்தி விவசாயிகள் மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து அதன் முடிவுகளின் அடிப்படையில் ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். மண் மற்றும் நீர் மாதிரிக்கு ஆய்வு கட்டணமாக தலா ரூ.20 செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.

சிறப்பு முகாம்

அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி வரகூரிலும், 11-ந் தேதி நஞ்சை இடையாறு பகுதியிலும், 17-ந் தேதி கூடச்சேரியிலும், 19-ந் தேதி கோப்பணம்பாளையத்திலும், 26-ந் தேதி எலச்சிபாளையம் ஒன்றியம் நல்லிப்பாளையத்திலும் சிறப்பு மண் பரிசோதனை முகாம் நடக்கிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story