மதுரை வைகை ஆற்றுக்குள் மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்கான மண் பரிசோதனை


மதுரை வைகை ஆற்றுக்குள் மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்கான மண் பரிசோதனை
x

மதுரை வைகை ஆற்றுக்குள் மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்கான மண்பரிசோதனை நடைபெற்றது.

மதுரை

மதுரை வைகை ஆற்றுக்குள் மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்கான மண்பரிசோதனை நடைபெற்றது.

மெட்ரோ ரெயில்

மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான 31 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.8,500 கோடி திட்ட மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 75 இடங்களில் மண் பரிசோதனை நடந்து வருகிறது. அதாவது திருமங்கலம்-ஒத்தக்கடை இடையேயான 31 கிலோமீட்டர் தூரத்தில் ஒவ்வொரு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு இடத்தில் மண் பரிசோதனை நடக்கிறது. தற்போது 68 இடங்களில் மண் பரிசோதனை முடிந்துள்ளது.

இந்த மண் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மண் அனைத்தும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

வைகை ஆற்றுக்குள்...

இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றுப்பகுதிக்குள் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் அந்தப் பாதையில் மண் பரிசோதனைக்காக மண் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக நவீன எந்திரங்கள் மூலம் சுமார் 30 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு மண் மாதிரி சேகரிக்கப்படுகிறது.

விரிவான திட்ட அறிக்கைக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கினால் உடனடியாக மதுரை மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.


Next Story