வேதாரண்யம் பகுதி கோவில்களில் மகாதீபவிழா
வேதாரண்யம் பகுதி கோவில்களில் மகாதீபவிழா நடந்தது.
வேதாரண்யம் பகுதி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கார்த்திகை பவுர்ணமி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் பிரசித்திப்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த இக்கோவில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக தலபுராணம் கூறுகிறது. இங்கு அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார். இங்கு திருக்கார்த்திகை மற்றும் கார்த்திகை பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் சந்திரசேகரர் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் பனை ஓலையால் 25 அடி உயரத்தில் சொக்கப்பனை கட்டி அதற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாணசுந்தரர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல மறைக்காடர் கோவில்
வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள வேதநாயகி உடனாகிய மேல மறைக்காடர் கோவிலில் கார்த்திகை பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் சாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 திரவிய பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.